சென்னை,
தனியார் பால் நிறுவனங்களுக்கு பாக்கெட் பால் விற்பனைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாக்கெட் பால் விற்பனையைத் தவிர்த்து தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை பயன்படுத்துமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. இதன் போது, பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்வதற்கு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொடைக்கானலில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முதல் இரண்டு நாட்களில் 40 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஊட்டியில் வெறும் 6 லிட்டர் மட்டுமே விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவரங்களை கவனித்த நீதிபதிகள், தானியங்கி பால் விற்பனை முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தானியங்கி பால் விற்பனை எந்திரங்கள் குறித்து விரிவான விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவை பயன்பாட்டுக்கு வந்துள்ள பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
ஆவின் நிறுவனத்தைப் போலவே, தனியார் பால் நிறுவனங்களும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் தங்களது சொந்த தானியங்கி பால் விற்பனை எந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.