திண்டுக்கல்,
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தற்காலிகமாக முழு தடை விதித்துள்ளன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதைகளில் கடுமையான பனிமூட்டமும், ஆங்காங்கே நிலச்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, தேனி மாவட்டத்தை இணைக்கும் கொடைக்கானல் - அடுக்கம் மலைப்பாதை தற்காலிகமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது. தற்போதைக்கு வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாக மட்டுமே அத்தியாவசிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மழை தீவிரமடைந்துள்ளதால், வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கொடைக்கானலில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்றும், அருவி மற்றும் பாதுகாப்பற்ற மலை விளிம்புப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.