சுருளி அருவி 
தமிழக செய்திகள்

சுருளி அருவியில் 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

அசம்பாவிதங்களைத் தவிர்க்க அருவிப் பகுதியில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவியில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை இன்று 8-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மழை தீவிரம்

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் மேகமலை, தூவானம் அணை, மகாராஜாமெட்டு மற்றும் சுருளி அருவியின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குளிக்க தடை

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறையினர் குளிப்பதற்கான தடையை இன்று 8-வது நாளாக நீட்டித்துள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அருவிப் பகுதியில் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்

நீர்வரத்து சீராகி, இயல்பு நிலை திரும்பிய பின்னரே சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

SCROLL FOR NEXT