தமிழக செய்திகள்

தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு

புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சியில் நடைபெற்ற அரசியல் சுற்றுப்பயண கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெறுவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி திருச்சிக்கு சென்றார். அப்போது, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் அவர் மனுக்களை வைத்து வழிபாடு நடத்தினார்.

இதை கேள்விப்பட்டு அங்கே ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் திரண்டனர். இதனால், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டும் அதை கேட்காமல், போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, புஸ்சி ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்டோர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்து இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கை பிப்ரவரி 4-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.