திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வங்கி உதவி மேலாளர் பலியானார். மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
வங்கி உதவி மேலாளர்
தர்மபுரி மாவட்டம், நெல்லை நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் ராஜசேகர் (வயது 31). இவர் திருச்சியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.எஸ்.எம். தோட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கீர்த்தி சீனிவாசன் (31). இவர் திண்டுக்கல் நேருஜி நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
சுழலில் சிக்கினர்
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று வங்கி விடுமுறை என்பதால் காரில் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கியுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 2 பேரும் தண்ணீரில் ஏற்பட்ட சுழலில் சிக்கினர். இதனால், அவர்கள் உயிர் பயத்தில் தண்ணீரில் தத்தளித்தவாறு சத்தம் போட்டனர்.
ஒருவர் உயிருடன் மீட்பு
இதனை பார்த்த அருகில் குளித்துக்கொண்டிருந்த, எட்டரை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் விரைந்து செயல்பட்டு கீர்த்தி சீனிவாசனை மீட்டு கரையில் விட்டுவிட்டு, தொடர்ந்து ராஜசேகரை மீட்க முயன்றார். அப்போது, அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன் சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீர்த்தி சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
ராஜசேகர் பிணமாக மீட்பு
மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின்பு ராஜசேகர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன்சிங் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------