தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.35கோடி

பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம், நகை, கரன்சி நோட்டுகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள நகை, பணம் உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது.

உண்டியல் காணிக்கை

அதன்படி, பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. அப்போது உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு. அதிலுள்ள பணம், நகைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடப்பட்டன. இந்த பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

ரூ.4.35 கோடி கிடைத்தது

முதல் நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 27 லட்சத்து 4 ஆயிரத்து 923-ம், தங்கம் 746 கிராம், வெள்ளி 7 கிலோ 560 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 730-ம் கிடைத்தது. இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது காணிக்கையாக ரூ.1 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரத்து 648-ம், தங்கம் 208 கிராம், வெள்ளி 1 கிலோ 771 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 108-ம் கிடைத்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் மூலம் ரூ.4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 571-ம், தங் கம் 954 கிராம், வெள்ளி 9 கிலோ 331 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 838-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.