தமிழக செய்திகள்

தலைமுறை தலைமுறையாக வாழும் வவ்வால்கள்... பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கும் கிராமம்!

பொதுவாக தீபாவளி பண்டிகையின்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.

பாலக்கோடு,

தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில், வவ்வால்களின் நலனுக்காக பட்டாசு வெடிப்பதையே மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்களது மகிழ்ச்சியைவிட வாயில்லா உயிரினங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கிராம மக்களின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆயிரக்கணக்கான வவ்வால்கள்

பாலக்கோடு அருகே பல்லேனஹள்ளி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றிலும் மிகவும் பழமையான பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட 5 மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

மரங்களின் கிளைகளில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் வவ்வால்கள், பகல் நேரங்களில் ஓய்வெடுக்கின்றன. இரவு நேரங்களில் உணவு தேடிச் செல்லும் அவை, மீண்டும் அதிகாலை நேரத்தில் தங்களது வாழ்விடமான மரங்களுக்குத் திரும்புகின்றன.

மரங்களின் கிளைகளில் ஏராளமான வவ்வால்கள் ஒன்றாகத் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி, அந்த வழியாகச் செல்வோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பல தலைமுறைகளாக இந்த மரங்களையே வாழ்விடமாகக் கொண்டு வவ்வால்கள் வசித்து வருவதால், அவற்றை கிராம மக்கள் தங்கள் ஊரின் ஓர் அங்கமாகவே கருதி வருகின்றனர்.

பட்டாசு வெடிக்க தடை

பொதுவாக தீபாவளி பண்டிகையின்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். ஆனால், பல்லேனஹள்ளி கிராம மக்கள் மட்டும் வவ்வால்கள் வசிக்கும் மரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.

பட்டாசுகளின் அதிகப்படியான வெடிச்சத்தத்தால் வவ்வால்கள் அச்சமடைந்து பாதிக்கப்படலாம் என்பதால், அவற்றின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் தங்களது தீபாவளிக் கொண்டாட்டத்தையே மாற்றியமைத்துள்ள கிராம மக்கள், வவ்வால்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிச்சத்தம் எழுப்பாமல் கவனமாக இருந்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையிலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் பல்லேனஹள்ளி கிராம மக்களின் இந்த செயல், இயற்கை மீதான அவர்களின் அன்பையும், உயிரினங்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT