விழுப்புரம்,
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் 25வது நாளாக மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதியினர்.
இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந் தேதி அதிகாலை மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 30 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
ஆலம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிக விசாரணை மையம் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுமியின் தாய், தந்தை, சகோதரி, பாட்டி மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதுவரை இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இன்னும் சிறுமி குறித்து எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மாயமான செஞ்சி சிறுமியை பெண் ஒருவர் அழைத்து சென்றதை பார்த்ததாக கட்டிட தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். இந்த தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புவனகிரி விரைந்து வந்து அந்த கட்டிட தொழிலாளியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த நபர், நான் புவனகிரி கடைத்தெருவில் உள்ள சலூனுக்கு வந்த போது சிறுமி ஒரு பெண்ணுடன் யாசகம் கேட்டதாகவும், நான் 100 ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அவரிடம் மேலும் சில கேள்விகளை எழுப்பி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில்களை கூறினார். இதனால் அவர் கூறுவது உண்மை தானா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. இருப்பினும் போலீசார் புவனகிரி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று நாமக்கல் பகுதியை சேர்ந்த அங்கன்வாடி மைய சமையலரான பெண் ஒருவர், செஞ்சியில் மாயமான சிறுமியை போன்ற ஒருவரை தத்தகிரி முருகன் கோவில் பகுதியில் பார்த்ததாகவும், அவருடன் 55 மற்றும் 35 வயது நிரம்பிய ஒரு ஆணும், பெண்ணும் இருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாமக்கல் விரைந்து சென்று அந்த பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளூர் போலீசார் உதவியுடன் மாயமான சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட ரவுடியின் மற்றொரு நண்பரான ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வாலிபரை அவர் ஆடு மேய்க்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்து சென்று அவரிடம் சிறுமி மாயமானது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் ஆலம்பூண்டியில் தங்கி கரும்பு வெட்டும் பணி செய்து வரும் பண்ருட்டியை சேர்ந்த தொழிலாளியையும் விசாரணை மையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. அப்போது அவரிடம், உண்மையிலேயே நீங்கள் கரும்பு வெட்டும் பணிக்காக தான் இங்கு வந்தீர்களா? என கேள்வி எழுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுமியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சிறுமி மாயமாகி இன்றுடன் 25 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இன்னும் சிறுமி பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து இன்று 15-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நிருபர்கள், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாவிடம் கேட்டபோது, விரைவில் தகவல் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆலம்பூண்டியை சேர்ந்த 5 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர், ஏற்கனவே 13 லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர் சிபிசிஐடி போலீசார்.