சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் கவர்னர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 118 எம்.எல். ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, ஆட்சி அமைக்க கவர்னர் உரிய உத்தரவு பிறப்பிக்காததால், விஜய் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நடந்தது. இதில் பொதுச்செயலா ளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டத்துறையை சேர்ந்த வக்கீல்களும் பங்கேற்றனர். அவர்களிடம் சட்டரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் பனையூரில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏக்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறுகையில்,
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் நம்முடன் இணைவார்கள். தவெகவினர் எதையும் நினைத்து குழம்ப வேண்டாம், உறுதியாக இருங்கள். நல்ல முடிவு வரும்வரை காத்திருங்கள். உங்கள் முன்பு 10 கோடி ரூபாயை வைத்து பேரம் பேசினால்கூட தலைவர் விஜய் புகைப்படத்தை பார்த்துவிட்டு நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள், நல்லதே நடக்கும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், பனையூரில் இன்று காலை மீண்டும் தவெக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. விசிக, சிபிஐ, சிபிஐஎம் கட்சிகளின் ஆதரவை தவெக நாடியுள்ள சூழலில், அக்கட்சிகள் இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.