கரடி 
தமிழக செய்திகள்

கோத்தகிரி அருகே பூட்டிய கடையை உடைத்து உணவு தேடிய கரடி: பொதுமக்கள் அச்சம்!

கடையின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கரடி கடையை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரடி ஒன்று பூட்டிய கடையை உடைத்து உணவைத் தேடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கைக்காட்டி நகர்ப்புறப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிகக் கடை இரவு நேரத்தில் வழக்கம்போல் பூட்டப்பட்டிருந்தது.

உணவு தேடிய கரடி

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த கரடி ஒன்று, கடையின் முன்பக்க கதவு மற்றும் முகப்புப் பகுதியை பலமாக உடைத்து சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடைக்குள் புகுந்து உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தீவிரமாகத் தேடியது.

பொதுமக்கள் கோரிக்கை

வழக்கம்போல இன்று (புதன்கிழமை) காலை கடையைத் திறக்க வந்த உரிமையாளர், கடையின் முன்புறம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கரடி கடையை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகர்ப்புறப் பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சமடைந்தனர். மேலும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த கரடியை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.