தமிழக செய்திகள்

விக்கிரமசிங்கபுரம் சாலையில் உலாவி வரும் கரடிகள்

கரடிகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவார கிராமங்களில் புகுந்து தொல்லை கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது.

நெல்லை,

விக்கிரமசிங்கபுரத்தையொட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவார கிராமங்களில் புகுந்து தொல்லை கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக விக்கிரமசிங்கபுரம், திருப்பதியாபுரம், செட்டிமேடு, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் உலா வருகின்றன. நேற்று முன்தினம் இரவில் விக்கிரமசிங்கபுரம் மங்கம்மா சாலையில் இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றித்திரிந்தன.

இதனை அவ்வழியாக காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக யாரேனும் மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தால் கரடிகள் தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் நிலவுவதால் இரவு நேரங்களில் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர பெரும் அச்சமடைந்துள்ளனர். கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.