தமிழக செய்திகள்

நெல்லை: குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகள் - கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விக்கிரமசிங்கபுரம் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்பு, கோட்டைவிளைப்பட்டி, பசுக்கிடைவிளை மற்றும் அகஸ்தியர் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இப்பகுதிகளில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கரடிகள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. பாபநாசம் மலையடிவார பகுதிகளில் கரடிகள் ஜோடியாகவும் தனித்தனியாகவும் இரவு நேரங்களில் தெருக்களில் உலா வருகின்றன.

நேற்று முன்தினம் இரவில் டாணா காளிபார்விளையில் பல இடங்களில் கரடிகள் ஜோடியாகவும், தனித்தனியாகவும் உலா வந்தன. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து கரடிகளை பிடித்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து இருந்து வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.