தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்புள்ள 40 மூடை பீடி இலைகளை கியூபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் உட்கோட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டினம் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூபிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கீதன், ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இன்று (13.10.2026) அதிகாலை 2.40 மணியளவில் வீரபாண்டியபட்டினம் ஒரு தனியார் டிம்பர் டிப்போ வடபுறம் கடற்கரைக்கு செல்லும் வழியில் சோதனையிட்டபோது, இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 35 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இருப்பினும், இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லோடு வாகனத்தை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க கியூபிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.