தூத்துக்குடி,
தூத்துக்குடி கணேஷ்நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ஹரிபாலகிருஷ்ணன் (வயது 50). இவர் தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஜிம்காணா கிளப் எதிரே சொந்தமாக மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். மேலும் தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு, இரவு 11 மணியளவில் ஹரிபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கணேஷ்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து அவரை வழிமறித்துள்ளனர்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்களில் 2 பேர் தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிபாலகிருஷ்ணனின் தலையின் பின்பகுதி மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினர். இந்த திடீர் தாக்குதலால் அவர் அலறியபோது, மர்ம நபர்கள் அவரது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துள்ளனர்.
ஹரிபாலகிருஷ்ணனின் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதற்குள், அந்த 3 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அப்பகுதியினர், உடனடியாக அவசர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி, குற்றவாளிகளின் அடையாளங்களை சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்திற்கு தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த வழிப்பறி மற்றும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வியாபாரிகளை திரட்டி தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என ஐக்கிய வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.