தமிழக செய்திகள்

‘எம்.எல்.ஏ., எம்.பி. ஆக இருப்பது பெருமையல்ல, விடுதலைச் சிறுத்தையாக இருப்பதுதான் பெருமை’ - அமைச்சர் வன்னி அரசு

அமைச்சர் பதவியை விட சாதி ஒழிப்பு களம்தான் முக்கியமானது என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. சமூக நீதி, அரசியல் மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்த 7 பேருக்கு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் அமைச்சர் வன்னி அரசு பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

“எம்.எல்.ஏ., அல்லது எம்.பி. ஆக இருப்பது பெருமையல்ல, விடுதலைச் சிறுத்தையாக இருப்பதுதான் நமக்கு பெருமை. இன்று எம்.எல்.ஏ. அல்லது அமைச்சராக இருப்பவர்கள் நாளை அந்த பதவியில் இல்லாமல் போகலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தை என்ற அந்த பொறுப்பை யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாது. அதுதான் நமக்கு நிரந்தரமான பதவி, அதுதே நமக்கு பெருமை.

அதையெல்லாம் உணர்ந்து கொண்டுதான் இந்த சாதி ஒழிப்பு களத்தில், தமிழ் தேசிய களத்தில், எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவனருடைய படை அணியிலே இன்றைக்கு நாம் நின்று வருகிறோம். இன்றைக்கு நான் அமைச்சராக இருக்கின்றேன். சாதி ஒழிப்பு களமா? அமைச்சர் பதவியா? என்றால் எனக்கு சாதி ஒழிப்பு களம்தான் முக்கியம். தமிழ் ஈழ விடுதலைக் களமா? அல்லது அமைச்சர் பதவியா? என்றால் தமிழ் ஈழ விடுதலைக் களம்தான் நமக்கு முதன்மையானது.

தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்கின்ற களம் முக்கியமா? அல்லது அமைச்சர் பதவியா? என்றால் நமக்கு தமிழ்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கக் கூடிய களம்தான் முக்கியம். அப்படி நம்மை வழிநடத்தி வருகின்றவர் தொல்.திருமாவளவன். நமக்கான விடுதலை, நமக்கான ஆளுமை எழுச்சித் தமிழர் வந்த பிறகுதான் இன்றைக்கு கிடைத்திருக்கின்றது.

அந்த ஆளுமை மீண்டும், மீண்டும் இந்த களத்திலே உயர்ந்து சிறந்து விளங்க வேண்டும். அதற்காக நாம் அத்தனை பேரும் ஒன்றிணைந்து, விடுதலைச் சிறுத்தையாய் தொடர்ந்து கிராமம், கிராமமாக எல்லா பகுதியிலும் நின்று களமாட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.