கடந்த திமுக ஆட்சியில் 2023 ஆம் ஆண்டு முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் 1.06 கோடி பேருக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அரசு சார்பில் வரவு வைக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். பின்னர் தேர்தல் நேரத்தில் மேலும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 1.31 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து விஜய் தலைமையிலான அரசும் இதே 1.31 கோடி பேருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறது. தேர்தலுக்கு முன்பு தவெக ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் கூறியிருந்தார். ஆனால் தற்போதைக்கு இந்த தொகையை வழங்க முடியாது எனவும் கூடிய விரைவில் ரூ.2,500 வழங்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளாக 2-ஆம் கட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன. திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். இந்த நிலையில், பயனாளிகளை பெருமளவில் நீக்கும் நடவடிக்கைகள் எதுவும் அரசால் எடுக்கப்படவில்லை என்றும் 50 சதவீதம் பேர் நீக்கம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.