நெல்லை,
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளம் பகுதியைச்சேர்ந்தவர் சேவியர் (வயது 80). இவர் கால்நடைத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று அவருடைய செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் பெங்களூர் காந்திநகர் போலீஸ் நிலையத்திலிருந்து சி.பி.ஐ. பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி ஒருவர் முதல் தகவல் அறிக்கையை அனுப்பினார்.
இந்த குற்றத்திற்காக தங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்வோம் என்று மிரட்டினார். அதேபோல் மறுநாள் மீண்டும் தொடர்புகொண்ட அவர்கள், ஆள் கடத்தலில் ஈடுபட்டு ரூ.3 கோடியை ஒருவர் பெற்றுள்ளார். அதற்கான கமிஷன் தொகை ரூ.30 லட்சம் சட்ட விரோதமாக உங்களது வங்கி கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளதால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
இதுதொடர்பாக 3 நபர்கள் போலீஸ் சீருடையில் 3 நபர்கள் வீடியோ கால் மூலம் தோன்றி மிரட்டும் தோணியில் பேசினர். உங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமானால் நாங்கள் சொல்லுகின்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புங்கள் என்றனர். இதனால் பீதியடைந்த சேவியர் மொத்தம் ரூ.53 லட்சம் பணம் அனுப்பி உள்ளார். அதன் பிறகு அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சேவியர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலிசார் பெங்களூர் சென்று இந்த மோசடியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த சந்தோஷ் பாபு (வயது 44) என்பவரை கைது செய்து நேற்று நெல்லைக்கு அழைத்து வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.