தமிழக செய்திகள்

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

54-ம் ஆண்டு திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வேளாங்கண்ணி தேவாலயம்

சென்னை பெசன்ட்நகரில் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் 54-ம் ஆண்டு திருவிழா வரும் 29-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது.

கொடி பவனி

இது தொடர்பாக, சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய பாதிரியார் அருளப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய 54-ம் ஆண்டு திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஆகஸ்டு 29-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி பவனி தொடங்கும். மாலை 5.45 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியேற்றுகிறார். அதன்பிறகு, திருப்பலி நடைபெறும். 30-ந் தேதி நற்கருணை பெருவிழா நடைபெறும்.

கொடியிறக்கும் திருப்பலி

செப்டம்பர் 7-ந் தேதி அன்னை மரியாவினுடைய திருத்தேர் திருவிழா நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு தேர் பவனி தொடங்கும். பிறகு, ஆடம்பர கூட்டு திருப்பலி சென்னை மயிலை பேராயரால் நடத்தப்படும். செப்டம்பர் 8-ந் தேதி அன்னையினுடைய பிறப்பு பெருவிழா. காலை 2 மணி முதல் திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் கொடியிறக்கும் திருப்பலி நடைபெறும்.

அத்துடன் விழா முடிவடையும். இந்த ஆண்டு அமைதி என்ற மையக்கருத்தை வைத்து விழா நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழக்கம் போல் வருவார்கள் என்பதால், சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.