சென்னை,
பெசன்ட் நகர் கடற்கரையில் தோழியுடன் இருந்த வாலிபரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் பொன்னுவேல்புரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (22 வயது). இவர், அடையார் கஸ்தூரிபாய் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, பிரதீப் மற்றும் அவரது தோழி வைத்திருந்த 2 செல்போன்கள் மற்றும் வெள்ளி முலாம் பூசிய செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த வழிப்பறி சம்பவம் குறித்து பிரதீப், சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பெசன்ட் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர் (26 வயது), திடீர் நகரை சேர்ந்த அருள்ராஜ் (26 வயது), செம்பியம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அஸ்வின்குமார் (21 வயது) மற்றும் ஆர்யா (30 வயது) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதான அருள்ராஜ் மீது 3 குற்ற வழக்குகளும், ராஜசேகர், அஸ்வின்குமார், ஆர்யா மீது தலா 1 குற்ற வழக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.