தமிழக செய்திகள்

சிறந்த நூல் பரிசுத் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற அக்டோபர் 5-ந் தேதி கடைசி நாளாகும்.

சென்னை,

சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கணை விண்ணப்பங்களைப் பெற அக்டோபர் 5-ந் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கால நீட்டிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தில் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் நிறைவுசெய்து அளிக்கப் பெறும் நாள் அக்டோபர் 5-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பெறுகிறது.

பரிசுத்தொகை

அவ்வகையில், 33 வகைப்பாடுகளின் வாயிலாகப் பரிசுப்போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாக ஒரு நூல் தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்குப் பரிசுத்தொகையாக ரூ.50,000/- அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பாராட்டுத்தொகையாக ரூ.25,000/- என ஒரு நூலுக்கு ரூ. 75,000/- பரிசுத்தொகைகள் வழங்கப்பெறும்.

கடைசி நாள்

விண்ணப்பங்களை துறையின் வலைதளத்திலிருந்து (tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம்செய்து பரிசுக்குரிய விதிமுறைகளின்படி விண்ணப்பங்களை நிறைவு செய்து நூல்களுடன் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பெற வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான தன் முகவரியிட்ட உறையில் ரூ.10 அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- “தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ (Director of Tamil Development, Chennai) என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை (Demand Draft) சேர்த்து அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற அக்டோபர் 5-ந் தேதி கடைசி நாளாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.