சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ் திரைப்பட உலகில் தனிமுத்திரை பதித்து சிகரமாக உயர்ந்த இயக்குனர் பாரதிராஜா (84) இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூக வாழ்வில் முன்னேறிச் செல்ல தடைகளாக இருக்கும் சாதிகள் மற்றும் மதங்களின் எல்லைகளை உடைத்து “மனிதாபிமானத்தை உயர்த்தி பிடித்து, சமத்துவ நிலைக்கு மனித சமூகம் உயர வேண்டும்”, என்ற கருத்துகளை திரைப்படங்களில் வலிமையாக முன் வைத்து, தனிச்சிறப்புப் பெற்றவர்.
திரையுலகில் தனித்துவம் வாய்ந்த இயக்குநர்களாக விளங்கும் பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை போன்ற இயக்குநர்களை வழங்கிய பேராசன் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரெயில், வேதம்புதிது, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற படைப்புகள் நிகரற்ற இடம் பிடித்து நிற்பவைகளாகும்.
இசைஞானி இளையராஜாவும், இயக்குநர் சிகரம் பாரதிராஜாவும், நினைவில் வாழும் எஸ்பி பாலசுப்பிரமணியம் மூவரும் தமிழ் திரையுலகின் திசைவழியில் மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இணையற்ற நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டும் அல்லாமல், காவிரி நதிநீர் பகிர்வு, இலங்கை தமிழர் உரிமை பாதுகாப்பு, மாநில உரிமைகள் என வரும் போது களப் போராட்டக்களங்கில் பங்கேற்ற செயல்பாட்டாளர். தொடர்ந்து ஆதரித்தும் வந்தவர்.
வயது மூப்பு மற்றும் மகன் மனோஜ் மறைவு பாரதிராஜாவை பெரிதும் பாதித்து விட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பாரதிராஜாவின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து நிற்கும் அவரது வாழ்விணையர், மகள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.