தமிழக செய்திகள்

'அதுமட்டும் வேண்டாம்': அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் போட்ட தடை - என்ன தெரியுமா?

தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இருபெரும் கட்சிகளும் த.வெ.க.வை நோட்டமிட்டு வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. அரசு ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் சொந்தக் கட்சியை சேர்ந்த 30 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 4 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை கடந்த 15-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தொடர்ந்து மின் துறை வெள்ளை அறிக்கை கடந்த 25-ந் தேதி வெளியானது. கடந்த ஆட்சியாளர்களின் முறைகேடுகள், நிதி இழப்புகள் ஆகியவை இதில் கூறப்பட்டிருந்தன.

தவறு எதுவும் நடந்துவிடக்கூடாது

த.வெ.க. அரசு அமைந்த உடனேயே வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி என்பதை தொடர்ந்து கூறிவருகிறது. இதனால்தான், கடந்த ஆட்சியாளர்களின் ஊழலை வெளிக்கொண்டு வருவோம் என்றும் அதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறது. த.வெ.க. அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையனை தவிர அத்தனை பேரும் புதியவர்கள். ஏன், முதல்-அமைச்சர் விஜயே புதியவர்தான்.

இப்படி, மொத்த அமைச்சரவையும் புதியவர்களை கொண்டிருப்பதால், தவறு எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் விஜய் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறாராம். அதற்கு காரணமும் இருக்கிறது. முன்பு, தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். அல்லது அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தால் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால், இப்போது த.வெ.க. ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், தி.மு.க. - அ.தி.மு.க. என்ற 2 எதிர்கட்சிகள் இருக்கின்றன.

அமைச்சர்களுக்கு அறிவுரை

இரட்டைக்குழல் துப்பாக்கியாக தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இருபெரும் கட்சிகளும் த.வெ.க.வை நோட்டமிட்டு வருவதால், அமைச்சர்களில் செயல்பாடுகளில் எதுவும் தவறு நடந்தால், அதை பூதாகரமாக்கி விடுவார்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் நினைக்கிறாராம். அதனால்தான், அமைச்சர்களுக்கு அவர் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறார்.

இதற்கிடையே, த.வெ.க. அமைச்சரவையில் உள்ள முக்கியமானவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் பிரதான எதிர்க்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உண்மை என்றால், ஆட்சி கவிழும் அபாயமும் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுவிடும்.

விஜய் போட்ட தடை

இதுபோன்ற நிலையில்தான், அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தடை ஒன்றை பிறப்பித்துள்ளாராம். அதாவது, அடுத்த 6 மாதங்களுக்கு அமைச்சர்கள் யாரும், தினச் செலவு மற்றும் வழக்கமான கோப்புகளை தவிர வேறு எந்த புதிய கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளாராம்.

கடந்த ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் பலர், த.வெ.க. அரசையும் அணுகி வருவதால், அமைச்சர்கள் யாரும் தெரியாமல் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிவிடக்கூடாது என்று முதல்-அமைச்சர் விஜய் இவ்வாறு தடை விதித்துள்ளாராம். பழையவர்களுக்கு எதுவும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அது புதிய அரசுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி விடும் என்பதால் இந்த முடிவாம். த.வெ.க. அரசின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கப்போகிறது என்பதை காத்திருந்து கவனிப்போம்.