நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில், தனியார் பேருந்து ஹாரன் ஒலியை எழுப்பியதால் முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி தடுமாறினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சாலையில் இன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் முன்னால் தம்பதியினர் பைக்கில் சென்றனர். அப்போது பேருந்து ஓட்டுநர் தம்பதியின் பைக்கின் அருகில் சென்று ஹாரன் அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத தம்பதி, பதற்றத்தில் தடுமாறினர். இதனால் பைக்குடன் அவர்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டது. எனினும் சுதாரித்துக்கொண்டு பைக்கை நிறுத்தினர்.
அதன்பின், தங்களை அச்சுறுத்தும் வகையில் ஹாரன் அடித்த பேருந்தை பின் தொடர்ந்து சென்றனர். அந்த பேருந்து பள்ளிப்பாளையம் அருகே சென்றபோது பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீண்டநேரம் முடிவுக்கு வராததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.