கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக நொச்சிக்காடு, தம்மனாம்பேட்டை, திம்மராவுத்தன்குப்பம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பிராய்லர் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் திடீரென கொத்து கொத்தாக செத்து மடிந்தன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், இறந்த கோழிகளின் மாதிரிகளை நாமக்கல், சென்னை உள்ளிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இறந்த கோழிகள் பள்ளம் தோண்டி பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. மற்ற கோழிகளும் விற்பனை செய்யப்படாமல் அழிக்கப்பட்டன.
மேலும், புதிய கோழிகளை வாங்கி வளர்க்க வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிகள் வளர்க்க தடை விதித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய குழுவினர் கட்டியாகுப்பம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெறும் இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கோழிப்பண்ணைகளுக்குச் சென்று பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பறவை காய்ச்சல் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவாமல் தடுக்கும் நோக்கில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (NCDC) மருத்துவக் குழுவினர், மாவட்ட சுகாதாரத்துறை குழுவினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
அதன்படி, கோழிகள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும், யாருக்காவது இருமல், சளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.