தமிழக செய்திகள்

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை: பொது சுகாதாரத்துறை

கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் கடந்த சில நாட்களாக பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வந்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:-

பறவை காய்ச்சல் பாதிப்பு 99.9 சதவீதம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பற வைகளை வெறும் கையால் தொடக்கூடாது. காகங்கள், புறாக்கள் அதிகளவில் இறந்து கிடந்தால் உடனே தகவல் தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பறவை இறந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏதாவது உள்ளதா எனவும் கண்கா ணிக்கப்படுகிறது. பொதுஇடங்களில் இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது. இது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நோய் பரவ காரணமாகலாம். இறைச்சிக் கடைகள் மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநாசினிகள் தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உட்கொள்வது பாதுகாப்பானது. இவ்வாறு அவர் கூறினார்.