தமிழக செய்திகள்

மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் - நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வீரத்தின் வடிவமாகத் திகழ்ந்து, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இறுதி மூச்சுவரை அசைக்க முடியாத உறுதியுடன் போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை இன்று மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.

ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த மூன்று முக்கியப் போர்களில் அபாரமான வீரத்தால் மாபெரும் வெற்றிகளைப் பெற்றதுடன், மக்களின் நலனுக்காக பல ஆலய திருப்பணிகளையும் மேற்கொண்டு தன்னலமற்ற சேவையைச் செய்தார்.

தேசத்தின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே தியாகம் செய்து, வீரமும் தியாகமும் என்றென்றும் நிலைக்கும் உதாரணமாக விளங்கும் அவர் புகழை நெஞ்சாரப் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ”இன்றைய தினம் வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணத்தின் போது, மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, சங்ககிரியில் உள்ள மாவீரர் தீரன் சின்னமலை நினைவிடத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

தேசத்தின் சுதந்திரத்திற்காக தம் உயிரையே தியாகம் செய்த அவரது வீரமும் தியாகமும் எந்நாளும் நமக்கு ஊக்கமாகத் திகழ்கிறது. நம் நாடு நிலைத்திருக்கும் வரை அவரது புகழும் பெருமையும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என கூறப்பட்டிருந்தது.