தமிழக செய்திகள்

சென்னையில் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்: மாநகராட்சி தகவல்

சென்னையில் பெற்றோர் 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தேவையான தகவல்களை அனுப்பி பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழக்களை பெற வேண்டுமெனில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ்அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம் என்று மெடா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். சான்றிதழ் தொடர்பான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், "குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வாட்ஸ்அப் (whatsapp) மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர் 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தேவையான தகவல்களை அனுப்பி பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம். பெற்றோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு பி.டி.எப். (pdf) வடிவில் தானாகவே பிறப்புச் சான்றிதழ் தரப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.