தமிழக செய்திகள்

ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, அமமுக

27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும், 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுகவும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 80 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 53 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் தவெக 28 இடங்களிலும், திமுக கூட்டணி 20 இடங்களிலும், அதிமுக கூட்டணி 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு வந்துள்ளார் விஜய்.

இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும், 11 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுகவும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜன் 48,488 வாக்குகள் பெற்று 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் இப்ராஹிமை 47,512 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

அதே போல மன்னார்குடி தொகுதியில் அமமுக வேட்பாளர் காமராஜ் 68,416 வாக்குகள் பெற்று 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா 66,850 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.