கோவை,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஊட்டி தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றது. எஞ்சிய 26 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், கோவையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. 21ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் 2 நாட்கள் (நேற்று வரை) நடைபெற்றது.
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த 2 நாட்கள் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில் மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை முதல் 29ம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.