தமிழக செய்திகள்

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்...சிபிஎம் விமர்சனம்

பாஜக+ திமுக+ அதிமுக என்று கொள்கை புடலங்காய் சிபிஎம் கட்சிக்கு எப்போதும் இல்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சென்னை,

திமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறிய நிலையில், திமுகவுக்கும் சிபிஎம் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை விமர்சித்து முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சிபிஎம் தனது எக்ஸ் தளத்தில், “பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய்” என்று விமர்சித்துள்ளது.

108 இடங்களில்

தமிழ்நாட்டில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தன.இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களில் வென்ற த.வெ.க. ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது.

தவெகவுக்கு ஆதரவு

இருந்தாலும், தேவையான 118 உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறேன் என தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடியது த.வெ.க. அதன் அடிப்படையில், உடனடியாக திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தது. பின்னர் சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன. அதன்பிறகு விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றன.

கொள்கை புடலங்காய்

திமுக கூட்டணியில் போட்டியிட்டு த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததற்கு பல்வேறு விமர்சனங்கள் திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமீப நாட்களாக சிபிஎம் மற்றும் திமுக இடையே வார்த்தை யுத்தம் அதிகரித்துள்ளது. “திமுக - அதிமுக எதிர்காலத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று பெ.சண்முகம் கூறிய நிலையில், அதற்கு திமுக பதிலடி கொடுத்தது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் பெ.சண்முகத்தை விமர்சித்து நேற்று கட்டுரை வெளியானது. . இந்த நிலையில், சிபிஎம் கட்சி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு என்றும் பாஜக+ திமுக+ அதிமுக என்று கொள்கை புடலங்காய் சிபிஎம் கட்சிக்கு எப்போதும் இல்லை” என்று பதிவிடப்பட்டுள்ளது.