பொன்னேரி,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். முன்னதாக இன்று காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ராகுல்காந்தி, காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தந்தார். காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு சென்றார். பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் மீதும் தமிழ் மொழியின்மீதும் அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். தமிழ் மக்களின் மீதான தாக்குதல் என் மீதான தாக்குதல் போன்றது. இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் கலாசாரம் மீது தாக்குதல் நடத்துவார்கள்?
தமிழர்கள் யார் என்பதை பா.ஜ.க. சரியாக புரிந்து கொள்ளவில்லை. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்-ம் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது. வரும் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூட்டாளிகள் தமிழ் மண்ணில் நுழைய முடியாதபடி செய்ய வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் தங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இணைந்து என்ன செய்ய முயல்கிறார்கள் என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அன்று ராணுவம் மூலம் போர் தொடுத்தனர். இன்று ராணுவம் இல்லாமல் போரை நடத்துகிறது பா.ஜ.க. தமிழ் மொழி, கலாசாரம், வரலாற்றை அழிக்க நினைக்கின்றனர். நாங்கள் எப்போதும் அதை அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியது. பாஜகவின் சதித்திட்டத்தை நாம் போராடிமுறியடித்தோம்.
தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள பா.ஜ.க. முயற்சிக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.