கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அரசு அதிகாரிகளை விட தவெக நிர்வாகிகள் அதிகாரம் மிக்கவர்களா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

தனது கட்சியினரின் ஆணவத்தை விஜய் இனியும் கண்டுகொள்ளாமல் இருந்தால், அரசு இயந்திரம் முடங்கி விடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசு அதிகாரிகளை விட தவெக நிர்வாகிகள் அதிகாரம் மிக்கவர்களா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அதிகாரிகளுக்கு தெரியாமல், அரசிடம் முன் அனுமதி பெறாமல் தேனி மாவட்டத்தின் சோத்துப்பாறை அணை நீரை தவெகவினர் தன்னிச்சையாக திறந்ததாக வெளியாகியுள்ள காணொளியும், எழுந்துள்ள குற்றச்சாட்டும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையையும், சுமார் 2,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கான பாசனத் தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் சோத்துப்பாறை அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரம் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மட்டுமே உள்ள நிலையில், எதன் அடிப்படையில் தவெக கட்சியினரால் அணை திறக்கப்பட்டது?

அணையின் நீர்வரத்து, நீர் கையிருப்பு, சமூகத்தின் நீர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், அரசின் முன் அனுமதி இல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு அணை நீரை திறந்து வைக்கும் அதிகாரமும் துணிச்சலும் தவெகவினருக்கு எப்படி வந்தது? அரசு அதிகாரிகளை விட, தவெக கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் அதிகாரம் மிக்கவர்களா? தனது கட்சியினரின் ஆணவத்தை விஜய் இனியும் கண்டுகொள்ளாமல் இருந்தால், அரசு இயந்திரம் முடங்கி விடும்!

எனவே, உடனடியாக இச்சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உறுதி செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது அணை பாதுகாப்பு சட்டம், 2021 கீழ் வழக்குப்பதிவு செய்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT