தமிழக செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் வன்முறை; லெனின் சிலை உடைப்பு - சிபிஐ(எம்) கண்டனம்!

வன்முறையில் ஈடுபடும் பாஜக குண்டர்களை அம்மாநில காவல்துறை கைது செய்ய வேண்டுமென பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எஸ்.ஐ.ஆர். செயல்முறை வாயிலாக முறைகேடாக வெற்றி பெற்றதையொட்டி, அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்களில் பாஜக குண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, எதிர்கட்சிகளின் அலுவலகங்கள், கொடிக் கம்பங்கள், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் மாமேதை தோழர் லெனின் சிலையை உடைத்துள்ளனர். அதேபோன்று, திரிபுரா மாநிலத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாஜக குண்டர்களின் இந்த அராஜக வன்முறை தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பாசிச சக்திகள் லெனின் சிலையை சேதப்படுத்தினாலும் அவரது சித்தாந்ததை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தோழர் லெனின் சிலையை உடைத்து, எதிர்கட்சி அலுவலகங்ளையும், தோழர்களையும் தாக்கி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாஜக குண்டர்களை அம்மாநில காவல்துறை உடனடியாக கைது செய்து அமைதியை ஏற்படுத்திட வேண்டுமெனவும், பாஜகவினரின் இந்த அராஜக வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஜனநாயக சக்திகள் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்பிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.