தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கருப்புக்கொடிப் போராட்டம்! - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு

தென் மாநிலங்களுக்கு தண்டனையாக, இந்தத் தொகுதி மறுவரையறை அமையும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டையும், தென்னிந்திய மாநிலங்களையும் பாதிக்கும் வகையில், அம்மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில், மத்திய பாஜக அரசு ,அவசர கோலத்தில், தொகுதி மறுவரையறையை கொண்டுவருவதற்காக நாடாளுமன்றத்தில் நாளை (16.04.2026) அவசர சட்டத் திருத்தத்தை செய்ய உள்ளது. அதற்கு எதிராக திமுக  தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி, இப்போராட்டத்தை ஆதரித்து வரவேற்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தக் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்கும்.

அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஜனநாயக ரீதியிலான ,முறையான விவாதங்களை  நடத்தி, எந்த மாநிலமும் பாதிக்காத வகையில், கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்குப் பதிலாக, மத்திய பாஜக அரசு தென்னிந்திய மாநிலங்களை வஞ்சிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை கடைபிடிக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக செயல்படுகிறது..

நாளை கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் - தென் மாநிலங்களுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.

பெயரளவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகளை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, வட மாநிலங்களுக்கு, மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிப்பது அநீதியானதாகும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களுக்கு தண்டனையாக, இந்தத் தொகுதி மறுவரையறை அமையும்.

தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைவரும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடியை நாளை ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தக் கருப்புக்கொடி போராட்ட வேண்டுகோளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இந்தப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் .

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அனைவரும், பொதுமக்களும் தங்களது இல்லங்களிலும், பொது இடங்களிலும், மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை கருப்புக் கொடிகளை ஏற்ற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள்விடுக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.