விஜய் - எடப்பாடி பழனிசாமி 
தமிழக செய்திகள்

சரிந்து வரும் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற எங்கள் மீது பழி; எடப்பாடி பழனிசாமிக்கு தவெக பதிலடி

தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம் என்று தவெக தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. பின்னர், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

தேர்தலுக்குப்பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி தரப்பு, எஸ்.பி.வேலுமணி தரப்பு என இரு பிரிவுகளாக பிரிந்தது. இதனிடையே, அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாசாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக தவெக தகவல் தொழில்நுட்பப்பிரிவின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது..

தொடர் தோல்வி

தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது!

ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.

சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.

கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.

தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்.

எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.