சென்னை,
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அமைத்த 5 பேர் கொண்ட துணைக்குழு தரப்பரிசோதனையில் தோல்வியடையும் ரத்த வங்கிகளுக்கு தடை விதிக்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவர பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் 2024-25-ம் ஆண்டில் 1.46 கோடி யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 70 சதவீதம் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தானமாக பெறப்பட்ட ரத்தம் செலுத்தியதில், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 5 முதல் 7 வயதுடைய 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்ட மற்றும் பொருந்தாத ரத்தம் செலுத்தப்பட்டதாக வெளியான சம்பவத்தை தொடர்ந்து ரத்த வங்கிகளில் தரப்பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருந்து விதிகள் 1945-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் ரத்த வங்கிகளுக்கும் தர பரிசோதனையை கட்டாயமாக்க மருந்து ஆலோசனை குழுவின் துணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் விதிமீறலில் ஈடுபடும் ரத்த வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.
புதிய திட்டத்தின்படி, ஆண்டுக்கு 3 முறை தரப்பரிசோதனை நடத்தப்படும். இதற்கான கட்டணமாக ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த சோதனை இனிமேல் கட்டாயமாக்கப்பட உள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அமைத்த 5 பேர் கொண்ட துணைக்குழு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இவை அமலுக்கு வந்தால் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பின் கீழ் அனைத்து ரத்த வங்கிகளும் செயல்படவேண்டிய நிலை ஏற்படும். அதுபோல தரப்பரிசோதனையில் தோல்வியடையும் ரத்த வங்கிகள், தங்களது குறைபாடுகளை சரிசெய்யும் வரை வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.