தமிழக செய்திகள்

ராட்சத கடல் அலையில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவர் சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த புதன்கிழமை பிற்பகலில் 11 மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, ராட்சத அலையில் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கடலில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் புதன்கிழமை பிற்பகலில் 11 மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

ராட்சத அலை- படகு கவிழ்ந்து விபத்து

மீன்பிடித்து முடித்துவிட்டு மாலையில் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மணப்பாடு தூண்டில் வளைவுப் பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிப் படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒரு மீனவர் மாயம்

இந்த விபத்தில் படகில் இருந்த 11 பேரும் கடலில் மூழ்கினர். அதில் 10 மீனவர்கள் நீந்தி பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்த நிலையில், சுனாமி காலனியைச் சேர்ந்த சிலுவைப்பிச்சை என்பவரின் மகன் வால்டர் (வயது 23) மட்டும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

தேடும் பணி தீவிரம்

இதையடுத்து, மாயமான மீனவரை மீட்க 25-க்கும் மேற்பட்ட படகுகளில் சக மீனவர்கள் கடலுக்குச் சென்று தீவிரமாகத் தேடினர். மேலும், இந்தியக் கடலோர காவல் படையினரின் ரோந்துப் படகு மற்றும் 'டோனியர்' ரக விமானம் மூலமும் வான்வழியாகத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

மீனவரின் சடலம் மீட்பு

இந்த நிலையில், தீவிரத் தேடுதலுக்குப் பிறகு மணப்பாடு தூண்டில் பாலத்தை ஒட்டியுள்ள ஆழமான பகுதியில் மீனவர் வால்டரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT