தமிழக செய்திகள்

ஆந்திராவில் கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் - சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

காசிமேட்டில் சுமார் 800 மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

ஆந்திர மாநில கடலோர காவல்படையினர் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளை விடுவிக்குமாறு ஆந்திர பிரதேச மீன்வள ஆணையர் மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், தற்போது வரை தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

காசிமேடு மீனவர்கள்

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 24-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநில கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

800 படகுகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் காசிமேட்டில் சுமார் 800 படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தால் துறைமுகம் சார்ந்த வணிக செயல்பாடுகள் முடங்கியுள்ளன. மேலும், இதனால் சென்னை சந்தைகளில் சுமார் 100 டன் கடல் உணவுகளின் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை உயரக்கூடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT