தமிழக செய்திகள்

போடிநாயக்கனூர்: கிணற்றில் தள்ளி 2 பள்ளி மாணவர்கள் படுகொலை; வாலிபர் கைது

தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போடிநாயக்கனூர்,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்கள், புறா பிடித்து தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்டு, கிணற்றில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புறா ஆசை காட்டி கடத்தல்

ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (வயது 19) என்ற வாலிபர் பேச்சு கொடுத்துள்ளார். சிறுவர்களிடம், "உங்களுக்கு அழகான புறாக்கள் பிடித்து தருகிறேன், என்னோடு வாருங்கள்" என்று ஆசை வார்த்தை கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

கிணற்றில் தள்ளி கொலை

அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்று பகுதிக்கு சிறுவர்களை கூட்டி சென்ற கேசவ் பாலாஜி, எதிர்பாராத விதமாக இரண்டு சிறுவர்களையும் கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். கிணற்றில் விழுந்த சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்களை பல இடங்களில் தேடினர்.

தலைமறைவு

சிறுவர்கள் மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, வாலிபர் கேசவ் பாலாஜியுடன் சிறுவர்கள் சென்ற அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைத்தது. உடனடியாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கேசவ் பாலாஜியை தேடி புறப்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.

வாலிபர் கைது

தகவல் கிடைத்து் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றிலிருந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையை அரங்கேற்றிவிட்டு வெளியூருக்கு தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை (19), போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

நள்ளிரவில் போடி அருகே உள்ள மறைவிடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று, தப்பியோட முயன்ற வாலிபர் கேசவ் பாலாஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.