சென்னை,
சென்னை எண்ணூர் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி நேற்று மாயமான கல்லூரி மாணவரின் உடல், இன்று பெரிய குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பர்மா நகரைச் சேர்ந்தவர் முகமது பைசல் (வயது 18). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று (திங்கட்கிழமை) மாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களான சமீர், சாருக், முகமது கைப், யுவராஜ் ஆகியோருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அனைவரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கி முகமது பைசல் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். அவருடன் இருந்தவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த எண்ணூர் போலீசார், கடலோரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் மாயமான மாணவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரைப் பகுதியில் முகமது பைசலின் உடல் சடலமாகக் கரை ஒதுங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.