தமிழக செய்திகள்

சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் விழுந்த லாரி ஓட்டுநரின் உடல் மீட்பு

கடலுக்குள் உடைந்து விழுந்த லாரியின் முன்பக்க பாகத்தையும் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரியப்பன்(வயது 36), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பன், டிரெயிலர் லாரியில் கண்டெய்னரை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்கு சென்றார்.

அங்கு கண்டெய்னரை இறக்கிவிட்டு துறைமுகத்தை விட்டு லாரியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார். அப்போது அவர் அனுமதி இல்லாத பகுதிக்குள் லாரியை கொண்டு சென்றுள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்த துறைமுக ஊழியர்கள் லாரியை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளனர்.

ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க கேபின் உடைந்து கடலுக்குள் விழுந்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், துறைமுகம் போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல்படையினரின் உதவியுடன் கடலில் விழுந்த ஓட்டுநரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஐ.என்.எஸ். அடையாறு உள்பட இந்திய கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 5 நீச்சல் வீரர்கள் அடங்கிய குழுவினர் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த குழுவினர் துறைமுக அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில் கடலுக்குள் விழுந்த லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பனின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்குள் உடைந்து விழுந்த லாரியின் முன்பக்க பாகத்தையும் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து துறைமுகத்தின் வழக்கமான பணிகள் நடைபெற தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.