சேலம்,
சேலத்தில் சாக்கடை கழிவுநீரில் மிதந்த பச்சிளம் ஆண் சிசு உடல் மீட்கப்பட்டது. வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. செவ்வாய்பேட்டை, குகை பகுதிகளில் பெய்த மழையால் சாக்கடை கால்வாய் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக குகை லைன்ரோடு மிகவும் தாழ்வான பகுதி என்பதால் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடியது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிலர் நேற்று காலை சாக்கடை கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொல்காப்பியன் தெருவில் ஒருவரது வீட்டின் முன்பு உள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாயில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் சிசு உடல் ஒன்று இறந்த நிலையில் மிதந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சிசுவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் அந்த தண்ணீரில் ஆண் சிசு செவ்வாய்ப்ப்பேட்டை பகுதியில் இருந்து மிதந்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எங்கிருந்து இந்த ஆண் சிசு சாக்கடை கால்வாயில் அடித்து வரப்பட்டது? அதனை வீசியது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சாக்கடை கால்வாயில் ஆண் சிசு உடல் மிதந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.