தமிழக செய்திகள்

தூத்துக்குடிக்கு போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய ரக போயிங், ஏர்பஸ் விமானங்களை இயக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தொழில்கள் நிறைந்த மாவட்டம்

டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இணைப்பு சேவையுடன் பெரிய விமானங்களை இயக்கினால் பயணிகளுக்கான கட்டணமும் குறையும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் என்ற வகையில் தொழில்வளம் பெருகியுள்ளது.

தற்போது வின் பாஸ்ட் நவீன கார் தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்று புதிய தொழில்கள் வருகின்றன. மேலும் பல பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

போயிங் ஏர்பஸ் விமானங்கள்

துறைமுகம், ரெயில் நிலையம், நான்கு வழிச் சாலைகள் இணைப்பு என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெருகியுள்ளது. அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் கூடங்குளம் அணு மின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ திரவ எரிபொருள் நிறுவனம், விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படைத் தளம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களும் கங்கை கொண்டான் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக விமான நிலையம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பல துறையினர் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது தூத்துக்குடி சென்னை 4 முறை, தூத்துக்குடி -பெங்களூரு 1 முறை என விமானம் இயக்கப்படுகிறது. சிறிய ரக விமானம் இயங்கி வரும் நிலையில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் நிலையும் இருக்கிறது.

இந்நிலையில் தொழில் வளர்ச்சிக்கேற்ப விமானப் போக்குவரத்தை கூடுதல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புது டெல்லி, கொல்கத்தா நகரங்களுக்கு சென்னை வழியாகவும், மும்பை பெரு நகருக்கு பெங்களூரு வழியாகவும், ஐதராபாத்திற்கு கோயம்புத்தூர் வழியாகவும் போயிங் ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்கிட வேண்டும். பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும் போது பயணிகளுக்கான கட்டணம் குறைவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.