தமிழக செய்திகள்

லாலாபேட்டை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

லாலாபேட்டை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அதிகாரிக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

லாலாபேட்டை,

ரெயில்வே கேட்

கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரெயில்வே கேட்டில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. அதன் பின்னர் லாலாபேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் லாலாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இறந்தவர்களின் உடலை கூட ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கேட்டை திறந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்ட ரெயில்வே கேட் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தண்ணீர் ஊற்று

இதனைதொடர்ந்து லாலாபேட்டை ரெயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து ரெயில்வே கேட் மீண்டும் மூடப்பட்டது. ஆனால் லாலாபேட்டையில் ரெயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் பஸ், வேன் போன்ற பெரிய வாகனங்கள் சென்றுவர முடியாமல் உள்ளது.

மேலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் ஊற்று இருந்து கொண்டே இருப்பதால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சுரங்கப்பாதையில் பஸ் சென்றுவரும் வகையில் மாற்றி அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மிரட்டல் கடிதம்

இந்த நிலையில் லாலாபேட்டை ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மதியம் தமிழில் எழுதப்பட்ட மர்ம கடிதம் ஒன்று வந்தது. அப்போது பணியில் இருந்த நிலைய அதிகாரிக்கு தமிழ் தெரியாததால் அந்த கடிதத்தை அங்கேயே வைத்துவிட்டார்.

பின்னர் வேறு அதிகாரி பணிக்கு வந்த போது அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், லாலாபேட்டை ரெயில்வே கேட்டை திறக்காவிட்டால் வெடிகுண்டு வைத்து ரெயில் நிலையத்தை தகர்ப்போம் என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

போலீசார் குவிப்பு

இதனை தொடர்ந்து திருச்சி ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்டு, இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் லாலாபேட்டை ரெயில் நிலையத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கேண்டி என்ற மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி கொண்டு 2 கிலோமீட்டர் தூரம் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கும் பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தண்டவாளத்தில் சோதனை

கோவை ரெயில்வே பாதுகாப்பு படை சிறப்பு பிரிவினர் நேற்று மாலை மீண்டும் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா? என்று லூனா எனும் மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர். இதேபோல் வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, போலீசார் சரவணகுமார், அனீஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிநவீன கருவிகள் மூலம் லாலாபேட்டை ரெயில் நிலையம், தண்டவாளங்கள், கழிவுநீர் பகுதி, ரெயில்வே கேட் போன்றவற்றில் சோதனை நடத்தினர். ஆனால் அதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இந்த சம்பவம் காரணமாக லாலாபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லாலாபேட்டை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுரங்கப்பாதையின் நிலவரம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதேபோல் சுரங்கப்பாதையை சீரமைக்க ரெயில்வே துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூட்டத்தில் கலந்துகொண்ட ரெயில்வே மண்டல உதவி என்ஜினீயர்கள் சக்திவேல், முரளிதரன், திருச்சி சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீலா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.