சென்னை,
ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தின் கழிவறையில் 'BOOM - 1.50 PM' என எழுதப்பட்டிருந்த பேப்பர் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானத்தில் 192 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 198 பேர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது, அதன் கழிவறையில் ஒரு பேப்பர் கிடந்துள்ளது. அதில், 'BOOM - 1.50 PM' என எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட விமான ஊழியர்கள், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விமானத்தில் இருந்த 192 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், பயணிகளின் உடைமைகள் மற்றும் விமானம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது.
இதற்கிடையே, விமானத்தின் கழிவறையில் மிரட்டல் வாசகம் எழுதி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.