தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கம் மற்றும் திருச்செந்தூர் ஜே.சி.ஐ. சார்பில் திருச்செந்தூர் சொர்ணம் மஹாலில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது.
இந்த விழாவிற்குத் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென் மண்டல தலைவர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். சரவண ஐயர் நடுநிலைப்பள்ளி தாளாளர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் ஷேக் முகமது, அனைத்து சமுதாய மக்கள் நல இயக்க துணை தலைவர் வன்னிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்று ேபசினார்.
திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் அரங்குகளைப் பார்வையிட்டதுடன், சென்னை தொழிலதிபர் மகேந்திரகுமார் சார்பில் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கினார்.
முதல் விற்பனையை ஜே.சி.ஐ. தலைவர் சிவா தொடங்கி வைக்க, மாநில துணைத்தலைவர் முரளி சங்கர் பெற்றுக்கொண்டார். இதில் நல்லாசிரியர் சிவகாமி, முத்து முருகன், செல்வின், மதன்ராஜ், வழக்கறிஞர் சாத்ராக் மற்றும் பாரதி புத்தகாலயப் பொறுப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக குலசேகரபட்டினம் நல்நூலகர் மாதவன் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சியில் கலை, இலக்கியம், வாழ்க்கை வரலாறு, நாவல், அறிவியல், மருத்துவம் மற்றும் போட்டித் தேர்வு நூல்கள் என சுமார் 10,000 தலைப்புகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தகத் திருவிழா மார்ச் 14 முதல் மார்ச் 25 வரை (காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை) நடைபெறும். விற்பனையாகும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சசதவீதம் தள்ளுபடி உண்டு. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தினசரி ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவருக்குப் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.