தமிழக செய்திகள்

புத்தக வெளியீட்டு விழா: காங்கிரஸ் கட்சியின் அழைப்பை மு.க. ஸ்டாலின் நிராகரித்தாரா? - ஆர்.எஸ். பாரதி பதில்

மேகதாது பிரச்சனையை பற்றி விஜய் வாய் திறக்கவில்லை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரண்மனையில் வசிப்பவர்களுக்கு விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் பாமர மக்களைப் பற்றி கவலையில்லை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

வ.உ.சி.க்கு வீர வணக்கம்

வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வ.உ.சி. அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கிறது. மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் இங்கே வ.உ.சி. அவர்களுக்கு இந்த சிலை அமைக்கப்பட்டு, இன்றைக்கு இந்த நினைவு நாள் நிகழ்ச்சியிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு மறைந்த அந்த தியாகி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். வ.உ.சி. அவர்களுடைய தியாகம் எத்தகையது என்பதை இன்றைய இளைய சமுதாயம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திர இந்தியாவினுடைய சுதந்திர வெள்ளிவிழா நடைபெற்றபோது, அன்றைக்கு ஆட்சியிலே இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கோவையிலே சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கை நாட்டு மக்கள் அனைவரும் காண வேண்டும் என்பதற்காக இன்றைக்கு இருக்கின்ற ஓமந்தூரார் வளாகத்தில், அன்றைய ராஜாஜி மண்டபத்துக்கு பக்கத்தில் அந்த வ.உ.சி. அவர்கள் இழுத்த செக்கை கொண்டு வந்து சென்னை மாநகரத்திலே, தமிழ்நாட்டினுடைய தலைநகரத்திலே வைத்து எல்லோரும் பார்த்து அந்த தியாகிக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துவதிலே நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.

விலைவாசி உயர்வு

தொடர்ந்து விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “விலைவாசி பற்றி அவங்களுக்கு தெரிய நியாயம் இல்லை. காரணம் என்னன்னா அவர்கள் அரண்மனை வாழ்க்கை நடத்துகிறார்கள். பாமர மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஆனா ஓட்டு போட்ட பாமர மக்கள் தான் பரதேசியாகும் நிலை இருக்கிறது. தமிழ்நாடே பேங்கரப்ட் ஆகக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது. எல்லா தொழிலும் ஆந்திராவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. உணவுப் பொருள்கள் விண்ணை முட்டுகிறது. சின்ன வெங்காயம் 240ரூபாய் ஆகி இருக்கு.

அரசினுடைய அஜாக்கிரதையால் இது போன்ற விலைவாசியில் இருக்கிறது. அதேபோல அரிசி விலை மூட்டைக்கு ரூ.1,000 ரூபாய் கிட்டத்தட்ட உயர்ந்திருப்பதாக சொல்லுகிறார்கள். இதெற்கெல்லம் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு என்ன ரசிகர்கள் பாருங்க, டிவில கூட சொல்றாங்க. பெற்ற குழந்தை ஐசியுவில் இருக்க, நான் போய் விஜய் பார்த்துவிட்டு வரப்போறேன் சொல்லக்கூடிய அளவுக்கு பாமர மக்கள் இருக்கிற காரணத்தினால்தான் இது போன்ற நிகழ்வெல்லாம் நடக்குது.

இதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாமல் இருக்கு. காரணம், இப்படிப்பட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் நமக்கு தைரியமாக இருக்கலாம் என்ற தைரியத்தில்தான். இவ்வளவு நாள் வாயைத் திறக்காத முதல்-அமைச்சர் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிருக்காரா? சொல்லல” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் அழைப்பை மு.க. ஸ்டாலின் நிராகரித்தாரா?

இதனைத்தொடர்ந்து, “சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளதே. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், “அழைப்பை ஏற்பதும், ஏற்காததும் எங்களுடைய விருப்பம். அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், அழைப்பு வந்ததா என்பது தெரியவில்லை. அதுகுறித்துக கேட்க வேண்டும். எனக்கு தெரிந்தவரையில் எங்களுக்கு அழைப்பு வந்திருக்கலாம். ஏனென்றால், சோனியா காந்தியைப் பொறுத்தவரையில், மு.க. ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரை நாங்களும் மதிக்கிறோம். எங்களுடைய மரியாதை என்பது வேறு. நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது அவரவர் வசதி மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தது. அதனால், இது ஒன்றும் பிரச்சினை அல்ல” என்று தெரிவித்தார்.

விஜய் வாய் திறக்கவில்லை

இதனையடுத்து மேகதாது பிரச்சினை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மேகதாது பிரச்சினை பற்றி டெல்லிக்கு போனவர் ஒரு வார்த்தை கூட வாயை திறக்கல. இன்னைக்கு அதுதான் எல்லாருமே பேசி இருக்காங்க. இன்னைக்கு கர்நாடகா முதல்-மந்திரி சிவக்குமார் வந்து தைரியமா சொல்றார். எந்த தைரியத்துல பேசுறாருன்னா, இங்க ஒரு அரசாங்கமே இல்ல. ஆள் இல்லாத கேட்ல போய் அடிபட்டு சாவுற மாதிரி, ஆயிப்போச்சு தமிழ்நாடு. டிரெயின் வருதுன்னா போய் அடிச்சு சாவுற மாதிரி நிலைமை தமிழ்நாட்டுக்கு. அங்க போறாரு, காங்கிரஸ்காரங்கள பாக்குறாரு, ராகுல் காந்திய சந்திக்கிறாரு. ஆனா மேகதாது பிரச்சனையை மட்டும் தீர்க்க முடியாம இருக்குறதுக்கு.. என்ன காரணம்? அவருக்கு ஒன்னும் தெரியலன்னு அர்த்தம். மாணிக்கம் தாகூர் தற்போது த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் ஆகிட்டார்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT