தமிழக செய்திகள்

புத்தக கொள்முதல் முறைகேடு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

ஏஐ மூலமும் உருவாக்கப்பட்ட சுமார் ரூ. 7 கோடி மதிப்பிலான 70,674 சந்தேகத்திற்குரிய நூல்கள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

சென்னை,

புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக 5 அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து பொது நூலகத் துறை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்காக புத்தகங்கள் வாங்க மொத்தம் ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவசர கதியில் 30 நாளில் மோசடி புத்தகங்கள் வாங்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து 70,674 போலி புத்தகங்கள் அகற்றப்பட்ட நிலையில் இன்னும் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாகவும் மோசடி குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் காந்திபுரத்தில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனை தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்படி நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து திமுக, தவெக இடையே மோதல் வலுத்து வருகிறது. மேலும் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முறைகேடு புகாருக்குள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள், பெரியார் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் சுமார் ரூ. 22 லட்சம் பணம் கொண்ட மூன்று வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இதில் தொடர்புடைய நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய புத்தகங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை நவம்பர் 16க்குள் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கோவை 'பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பொது நூல கங்களுக்காக விதிமுறைகளை மீறி, வெறும் 30 நாட்களில் குறுக்கு வழியில் அவசர அவசரமாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும், இதில் போலி எழுத்தாளர்கள் பெயரிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலமும் உருவாக்கப்பட்ட சுமார் ரூ. 7 கோடி மதிப்பிலான 70,674 சந்தேகத்திற்குரிய நூல்கள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்கிறது, மேலும் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக 5 அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து பொது நூலகத்துறை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி அண்ணா நூற்றாண்டு நூலக அலுவலர்கள் காமாட்சி, சந்தானகிருஷ்ணன் (கோவை ஈவெரா நூலக பொறுப்பாளர்), கலைஞர் நூற்றாண்டு நூலக அலுவலர் தினேஷ்குமார், கார்த்திகேயன் ( அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை) மற்றும் பொது நூலக இயக்குநரகத்தின் தலைமை கணக்கு அலுவலர் ஜூலியட் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT