கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை...! மாவட்ட நிர்வாகம்

திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தமிநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினங்களான ஜனவரி 17 ஆம் தேதி காலை 04.14 மணி முதல் ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்என்று அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT