புதுக்கோட்டை ,
வடகாடு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே குளமங்கலம் வடக்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை-கவிதா. இவர்களது மகன் ரூபன் (வயது 17). இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குளமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மைக் செட் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணத்திற்காக கட்டியிருந்த சீரியல் மின் விளக்குகளை எடுப்பதற்காக சென்றிருந்தார்.
அப்போது அவர் வீட்டின் மாடியில் மின் விளக்குகளை கழற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.